தேசிய தினச் செய்தி 2008
என் சக சிங்கப்பூரர்களே,
வணக்கம்.
நாம் இந்த ஆண்டு தேசிய தினத்தை எச்சரிக்கையான மனநிலையுடன் கொண்டாடுகிறோம். கடந்த ஒரு வருடமாக உலகப் பொருளியல் நிச்சயமற்றதாக இருந்து வந்துள்ளது. வெளிச் சவால்களைக் கவனத்தில் கொள்கையில், சிங்கப்பூரின் பொருளியல் முடிவுகள் நன்றாகவே உள்ளன. ஆண்டின் முதல் பாதி, வளர்ச்சி 4.5 விழுக்காடாக இருந்தது. முழு ஆண்டு வளர்ச்சி 4-லிருந்து 5 விழுக்காட்டுக்கிடையில் இருக்கும், என நாம் எதிர்பார்க்கிறோம்.// முதல் பாதியில், நாம் 144,000 வேலைகளைச் சேர்த்தோம். வேலையின்மையும் 2.3 விழுக்காடாக குறைவாகவே உள்ளது.
2 அமெரிக்கப் பொருளியல் தொடர்ந்து கடுமையான பிரச்சினைகளை எதிர்நோக்குகிறது. வீடமைப்பு நெருக்கடி அதன் நிதி முறைக்கு மேலும் சவாலாக இருக்கிறது. அமெரிக்கப் பயனீட்டாளர்கள் குறைவாகச் செலவு செய்கிறார்கள். அவர்கள் அவ்வாறு செய்வது மொத்த உலகப் பொருளியலையும் பாதிக்கிறது. இந்தச் சிரமங்கள் அநேகமாக அடுத்த ஆண்டும் நீடிக்கும். அதன் பிறகு நிலைமை மேம்படலாம்.
3 சிங்கப்பூரின் பொருளியல் இதுவரை ஓரளவு பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. இதற்குக் காரணம், ஆசிய வட்டாரத்தின் துடிப்பு நமக்கு உதவியாக இருந்தது. ஆனால், ஆசியப் பொருளியல்கள் அமெரிக்காவின் பிரச்சினைகளின் தாக்கத்தை இப்போது எதிர் நோக்குகின்றன. நாமும்// அதை உணரத் தொடங்கியிருக்கிறோம். ஆகவே, எதிர்வரும் ஆண்டு கரடுமுரடாக இருக்கும். நாம் நம்மைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
4 சீனாவிலும், இந்தியாவிலும் உள்ள வாய்ப்புகள் மீது இன்னும் அதிக கவனம் செலுத்தும் முதலீட்டாளர்களின் பார்வையில், ஆசியானின் கவர்ச்சி குறைந்திருக்கிறது.// சில ஆசியான் நாடுகள் உள்நாட்டு பொருளியல் மற்றும் அரசியல் பிரச்சினைகளில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. ஆயினும், நாம் ஒன்று சேர்ந்து ஒரு குழுவாக உறுதியுடன் இயங்க வேண்டும், என்பது எல்லா ஆசியான் நாடுகளுக்கும் தெரியும். // சிங்கப்பூர் நம் பங்கை ஆற்றும். ஆனால், கொந்தளிப்பு மிகுந்த ஒரு வட்டாரத்தில், நாம் ஒரு போட்டித்திறன் உள்ள பொருளியலாக, ஒன்றிணைந்தச் சமுதாயமாக, மேலும் நேர்மை மற்றும் போட்டித்திறன் மிக்க அரசாங்கமாக, நமது மதிப்பைக் கட்டிக்காக்க வேண்டும்.
5 தற்போது இருக்கும் பணவீக்கப் பிரச்சினை, எல்லோருடைய எண்ணங்களிலும் முதன்மையாக இருக்கிறது, என நான் நிச்சயமாக நம்புகிறேன். நாம் உண்ணும் உணவு, பயன்படுத்தும் மின்சாரம், நம் கார்களுக்கான எரிபொருள், டாக்ஸிகள், பேருந்துகள், என்று இன்னும் பல பொருட்களுக்குக் கூடுதல் பணம் செலுத்துகிறோம். // உலக அளவில் விலைகள் அதிகரிக்கும் போது, இந்த விலைகள் அதிகரிப்பதை நம்மால் தடுக்க முடியாது. அது மட்டுமன்றி, நாம் எல்லா எரிபொருளையும், உணவையும் இறக்குமதி செய்கிறோம். // ஆனால் வளர்ச்சிப் பங்கீடுகள், U-Save, வேலைநலத் திட்டம், Medifund மற்றும் Comcare ஆகியவற்றின் மூலம் நாம் சிங்கப்பூரர்களின் பாரத்தைக் குறைக்கிறோம். இந்த நடவடிக்கைகள் குறிப்பாக வசதி குறைந்தோர், முதியவர்கள், நோய்வாய்ப்பட்டோர் ஆகியோரை மையமாகக் கொண்டுள்ளது. ஆயினும், நடுத்தர வருமான சிங்கப்பூரர்களும் இந்தக் காலக் கட்டத்தைச் சமாளிக்க உதவுவதற்கு உதவி பெறுகின்றனர்.
6 GST எனப்படும் பொருள், சேவை வரி, ERP எனப்படும் மின்னியல் சாலைக் கட்டணம் ஆகியவற்றின் அதிகரிப்புகள் போன்ற சில அரசாங்கக் கொள்கைகள் வாழ்க்கைச் செலவை உயர்த்தத் தான் செய்கின்றன. ஆனால், அவை அவசியமான கொள்கைகள். இல்லையென்றால், நாம் அவற்றைச் செய்யமாட்டோம்.// பொருள், சேவை வரி குறைந்த வருமான சிங்கப்பூரர்களுக்கு நீண்ட காலத்தில் உதவுவதற்கு, வேலைநலன் மற்றும் மற்றத் திட்டங்களுக்கான நிதியை வழங்க உதவுகிறது. மின்னியல் சாலைக் கட்டணம் நம் சாலைகளில் நெரிசலைக் குறைக்கிறது. // மேலும், அரசாங்கம், பொருள்-சேவை வரி தள்ளுபடிகள் மற்றும் சாலை வரிக் குறைப்புகள் ஆகியவற்றையும் வழங்கியிருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்தத் தொகைகள், பெரும்பாலான குடிமக்களுக்குக், குறிப்பாகக் வசதி குறைந்தோருக்குச், செலவு அதிகரிப்புகளை ஈடுகட்டுவதற்கும் மேற்பட்டு இருக்கின்றன.
7 விலைகள் உயர வேண்டியதில்லை அல்லது இந்தக் கொள்கைகள் அவசியமில்லாமல் இருக்க வேண்டும், என்று சிங்கப்பூரர்கள் விரும்புவது எனக்குத் தெரிகிறது. ஆனால் அது சாத்தியமில்லை.// எனினும், நாம் அதற்கு அடுத்த சிறந்த செயலைச் செய்கிறோம்: பயனளிக்கக்கூடிய நிவாரண நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தி, வசதி குறைந்தோருக்கும், உதவி தேவைப்படுவோருக்கும் உதவியை வழங்குவோம்.
8 நம்மைச் சுற்றி உலகில் என்ன நடக்கிறது என்பதைப் தெரிந்துகொள்ள, புதிய வாய்ப்புகளைக் கண்டறிய மற்றும் நமது இன்னும் நீண்ட காலச் சவால்களைச் சமாளிக்க, நாம் வாழ்க்கைச் செலவு போன்ற உடனடி பிரச்சினைகளுக்கு அப்பாலும் பார்க்க வேண்டும். அப்போது, நாம் நம்மைப் பலப்படுத்திக் கொண்டு எதிர்கால நெருக்கடிகளைச் சமாளிக்க மேலும் தயாராக இருப்போம். // குறிப்பாக, நாம் நம் பொருளியலை மேம்படுத்தவும், நம் மக்கள்தொகையைப் பெருக்கவும் மற்றும் மாறுகின்ற உலகத்திற்கு இணையாக இருப்பதற்கு, மாறிக் கொண்டே இருக்கவும் வேண்டும்.
9 நமது இலட்சியங்களை அடைவதற்கு, நாம் மேம்பாடு காணவும். வளர்ச்சி அடைவதும் வேண்டும். நாம் மற்ற எதையும் செய்ய முடியாது. சூழ்நிலைகள் சாதகமாக இருந்த கடந்த சில ஆண்டுகளாக நாம் கடுமையாக உழைத்ததால், நாம் இப்போது பல பெரிய திட்டங்களை எதிர்பார்க்கலாம்: // Formula One கார்ப் பந்தயம், ஒருங்கிணைந்த உல்லாசத் தளங்கள் மற்றும் உலகின் ஆகப் பெரிய சூரிய மின்கல ஆலை போன்ற பெரிய தயாரிப்புத் துறை முதலீடுகள் இவை. // இந்தத் திட்டங்கள் பல நல்ல வேலைகளை உருவாக்கி, நாம் நிச்சயமற்ற சூழ்நிலையை எதிர்நோக்கியிருந்தாலும் நமது வேகத்தை அதிகமாகவே வைத்திருக்கும்.
10 நமது பொருளியலை மேம்படுத்துவதற்கு, நாம் நம் மக்கள் மீது முதலீடு செய்ய வேண்டும், குறிப்பாகக் கல்வியின் மூலம், பெரும்பாலான நமது மாணவர்கள் செல்லும் நமது பலதுறை தொழிற்கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்விக் கழகங்களை நாம் மேம்படுத்துகிறோம். // மேலும், பல்கலைக்கழக இடங்களையும் நாம் அதிகரிக்கிறோம். அரசாங்கத்தின் பண உதவியோடு ஒரு புதிய பல்கலைக் கழகத்திற்கான திட்டங்களை அரசாங்கம் அங்கீகரித்திருக்கிறது. சாங்கி-யில் அமையப் போகும் அதன் வளாகத்திற்குத் தீவு முழுவதிலுமிருந்து நல்ல பேருந்து மற்றும் இரயில் வசதி இருக்கும். // அந்தப் பல்கலைக்கழகம் அதன் முதல் மாணவர் சேர்க்கையை 2011-ல் மேற்கொள்ளும். அந்தப் புதிய பல்கலைக்கழகம் சிங்கப்பூரர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்வதற்கும், முன்னேறிச் செல்வதற்கும் இன்னும் அதிக வாய்ப்புகளைத் திறந்துவிடும்.
11 நமது நீண்டகால எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு, நம் மக்கள்தொகையை ஈடுசெய்வதற்குப் போதுமான அளவு குழந்தைகளும் நமக்குத் தேவை. ஆண்டுக்கு ஆண்டு இன்னும் குறைவான அளவு சிங்கப்பூரர்களே திருமணம் செய்துகொள்கின்றனர்.// திருமணம் செய்துகொள்வோரும், குறைவான அளவு பிள்ளைகளையே பெற்றுக்கொள்கின்றனர். நாம் கடந்த பல ஆண்டுகளாக ஒவ்வொரு நடவடிக்கைகளாக மேற்கொண்டு வருகிறோம்,// ஆயினும் இன்னும் இந்தப் போக்கை மாற்றி அமைப்பதில் நாம் வெற்றி காணவில்லை.
12 இதை நாம் மிகவும் முக்கியமாகக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
திருமணம் செய்துகொள்வதும், பிள்ளைகள் பெற்றுக்கொள்வதும் தனிப்பட்டவர்களின் முடிவுகளாகும். // ஆயினும், இதை இயற்கையானதாகவும், வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாகவும் சிங்கப்பூரர்கள் காண்பதற்கும், மற்றும் குடும்பங்களைத் தொடங்குவதற்கான ஆதரவை இளைய தம்பதியினர் பெறுவதற்குமான ஒரு சூழ்நிலையை நாம் உருவாக்கலாம்.// நாம் இதை விரிவாக ஆராய்ந்திருக்கிறோம். அதோடு, தம்பதிகள் எதிர்நோக்கும் நடைமுறை பிரச்சினைகளைத் தீர்க்க உதவுவதற்கு மேலும் நடவடிக்கைகள் எடுப்போம்.// இன்னும் அதிகமான சிங்கப்பூரர்கள் பிள்ளைகளை வளர்ப்பதிலும், ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தை அமைப்பதிலும் மனநிறைவு காண்பார்கள், என நான் நம்புகிறேன். குடிமக்கள் முழுமையான, அர்த்தமுள்ள வாழ்க்கை வாழவும், மற்றும் ஒரு புதிய தலைமுறையை உருவாக்குவதன் இன்பங்களை அனுபவிக்கும் ஒரு நல்ல இல்லமாகச் சிங்கப்பூரை நாம் ஆக்குவோம்.
13 நமது புதிய தலைமுறை டிஜிட்டல் உலகில் வளர்வார்கள். இணையம் எங்குப் பார்த்தாலும், சமுதாயங்களையும், பொருளியல்களையும் மாற்றிக் கொண்டிருக்கிறது. இணையம், நாம் வேலை செய்யும், படிக்கும் மற்றும் வாழ்க்கை முறையையும் மாற்றும்.// நாம் அதற்கு ஏற்றவாறு நம்மை மாற்றிக்கொண்டு, நமது இணையக் குடிமக்களை உருவாக்க வேண்டும். இணையத்தை முழுமையாகச் சாதகமாக்கிக்கொள்வற்கு நாம் நமது கொள்கைகள் மற்றும் விதிகள், நமது சமுதாயம் மற்றும் தலைமைத்துவத்தை மாற்றியமைப்போம். // நாம் தொடர்ந்து நம் அமைப்பு முறையைப் படிப்படியாகத் திறந்துவிடுவோம். இதுதான் சரியான வழியாகும்.// ஆனால், இணைய உலகில் உள்ள அபாயங்களைத் தவிர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும். மேலும், அவற்றிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளக் தெரிந்து கொள்ளவும் வேண்டும்.
14 இவை யாவும் நீண்டகாலப் பிரச்சினைகள். நிறைய நாடுகள் இது போன்ற விவகாரங்களை நல்ல முறையில் சமாளிப்பதில்லை. // சில சமயங்களில், அரசியல் காரணங்களால் அரசாங்கங்கள், பிரச்சினைகளைச் சமாளிக்கக் குறுகிய கால நடவடிக்கைகளை எடுப்பதில் கவனம் செலுத்துகின்றன. // அடுத்த தேர்தலுக்குப் பிறகு நடப்பவற்றை அலட்சியப்படுத்தும்படி செய்துவிடுகிறது. மற்ற நாடுகளில், “பண அரசியல்” மொத்த அமைப்புமுறையையும் ஊழல் நிறைந்ததாக்கி விடுகிறது. // ஒரு தூய்மையான மற்றும் நிலையான, பொறுப்பான மற்றும் நிலைமைக்கேற்ற பதில் நடவடிக்கை எடுக்கும் அரசாங்கத்தைக் கொண்டிருக்கும் சிங்கப்பூர் தனிச்சிறப்பு வாய்ந்தது.// நம்மைச் சுற்றியுள்ள சில நாடுகளில் உள்ள அரசியல் கொந்தளிப்பை நாம் தவிர்த்திருக்கிறோம். சிறுபான்மை சமூகத்தினர் நியாயமற்ற முறையில் நடத்தப்படுவதாகக் கொந்தளிக்கவில்லை.// மேலும், உண்மையான அல்லது கற்பனையான எல்லா வகை காரணங்களுக்கான கட்டுங்கடங்காத ஆர்ப்பாட்டங்களும் இங்கு நடைபெறவில்லை.// அதற்குப் பதிலாக நாம் தலைவர்களைத் திறன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறோம், தலைவர்கள் மற்றும் மக்களுக்கிடையே நம்பிக்கையை ஏற்படுத்துகிறோம், மேலும் எல்லா சிங்கப்பூரர்களின் நன்மைக்காக ஒன்றுசேர்ந்து பணியாற்றுகிறோம். இப்படித்தான் சிங்கப்பூர் மற்ற நாடுகளைவிட சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது.
15 நாம் திறந்த போக்கு உள்ளவர்களாக மாறுகின்ற வேளையில், இந்தப் பலங்களைப் பாதுகாக்க வேண்டும். எல்லாச் சுதந்திரங்களும் சமுதாய நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பைக் கட்டிக்காக்கும் பொறுப்புகளுடன் வருகின்றன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.// அப்போதுதான், சிங்கப்பூர் தொடர்ந்து முதலீட்டாளர்களுக்குக் கவர்ச்சிகரமானதாக இருப்பதோடு நம் பொருளியலும் தொடர்ந்து வளர்ச்சி அடையும். மேலும், நாம் தொடர்ந்து நம் நாட்டை சிறப்பு மிக்கதாக ஆக்கலாம்.
16 நம் வட்டாரத்திலும், உலகப் பொருளியலிலும் நிச்சயமற்ற தன்மைகள் இருந்தாலும், சிங்கப்பூர் நல்ல நிலையில் உள்ளது.// நல்ல காலத்திலும், சிரமமான காலத்திலும் நாம் தொடர்ந்து ஒற்றுமையாக இருந்துள்ளோம். தொலைநோக்குடன் செயலாற்றியிருக்கிறோம், கவனமாக உறுதியுடன் முன்னோக்கி சென்றிருக்கிறோம்.
17 நமது இந்தச் சுதந்திர ஆண்டு விழாவில், நமது சாதனைகள் குறித்துப் பெருமை கொள்வோம், ஒன்றுசேர்ந்து சவால்களைச் சமாளிப்போம், தொடர்ந்து இன்னும் சிறந்த மற்றும் துடிப்பான சிங்கப்பூரை உருவாக்குவோம்.
18 நான் எல்லா சிங்கப்பூரர்களுக்கும் மகிழ்ச்சிகரமான தேசிய தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். வணக்கம். |